கோவா மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் ராட்சத முதலை ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் அருகே முதலை நடமாடியதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், வைல்டு லைஃப் மீட்புப் படையினர் அதைக் பத்திரமாக மீட்டுச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவாவில் உள்ள கந்தபார் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதிக்குள் ஒரு பிரம்மாண்ட முதலை நுழைந்து பாதுகாப்பான இடத்தைத் தேடி அங்கு தஞ்சம் புகுந்துள்ளது. வீட்டின் வளாகத்திற்குள் முதலை மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்ட மக்கள் பதறிப்போய் உடனடியாக விலங்கு நல ஆர்வலர்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
View this post on Instagram
இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், வீட்டின் வெளியே சாதாரணமாக உட்கார்ந்திருந்த மக்கள், முதலை திடீரென நகர்ந்து வரத் தொடங்கியதும் அலறியடித்துக்கொண்டு ஓடி வீடுகளுக்குள் தஞ்சம் புகுவது பதிவாகியுள்ளது.
இந்த எதிர்பாராத விருந்தாளியைக் கண்ட அப்பகுதி தெருநாய்கள் கொதித்தெழுந்தன. அந்த ராட்சத முதலையைப் பார்த்துப் பயம் கொள்ளாமல் அச்சமின்றி குரைத்த நாய்கள், அதைக் சுற்றி வந்து கூச்சலிட்ட காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. நாய்களின் இந்தப் பயமற்ற செயல் இணையவாசிகள் மத்தியில் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலையை கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடிய போதிலும், சிலர் எந்தவிதப் பயமும் இல்லாமல் அருகில் நின்று செல்போனில் வீடியோ பதிவு செய்ததும் நெட்டிசன்களை வியப்படையச் செய்தது. தகவல் அறிந்ததும் வைல்டு லைஃப் மீட்பு வீரர் சரண் தேசாய் மற்றும் அவரது குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். துரிதமாகச் செயல்பட்ட அவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் ஒரு ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், முதலைக்கு எந்தக் காயமும் இழைக்கப்படாமலும் மிகவும் பத்திரமாக அந்த ராட்சத முதலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் அது பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
