மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம், வள்சங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 32 வயதான பாக்கியஸ்ரீ நானாசாஹெப் கெய்க்வாட் என்ற திருமணமான பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கம்போல வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற அந்தப் பெண், அடுத்த நாளே சாலையோரத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த வள்சங் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாக்கியஸ்ரீயின் மரணத்திற்குக் காரணம் என்ன, அவருடன் கடைசியாகப் பேசியவர்கள் யார் மற்றும் சம்பவத்தன்று இரவு அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது திட்டமிட்டு யாரேனும் கொலை செய்து உடலைச் சாலையோரத்தில் வீசிச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறை குழுக்கள் அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அவரது செல்போன் அழைப்பு விவரங்களைச் சேகரித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைதியான கிராமப்புற பகுதியில் இடம்பெற்ற இந்த மர்ம மரணம், பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் எனக் தெரிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரணை நடத்தி, இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை விரைவில் வெளிக்கொண்டு வருவோம் என உறுதியளித்துள்ளனர்.