இந்தியாவில் அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புச் சந்தை மிகவேகமாக வளர்ந்து வரும் நிலையில், போலி மற்றும் காலாவதியான அழகுசாதனப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ அமைப்பால் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பில், அழகுசாதனப் பொருட்களை வாங்கியவர்களில் 26 சதவீதம் பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதும், 40 சதவீதம் பேர் போலி அல்லது கள்ளத்தனமான பொருட்களை வாங்கியதும் தெரியவந்துள்ளது.

இந்த போலி அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில் ஆன்லைன் தளங்கள், செயலிகள் மற்றும் இணையதளங்களே மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன. தாங்கள் வாங்கிய பொருள் போலி எனக் கண்டறிந்தவர்களில் 23 சதவீதம் பேர் அதை ஆன்லைனிலும், 18 சதவீதம் பேர் சில்லறை விற்பனைக் கடைகளிலும், 14 சதவீதம் பேர் உள்ளூர் சந்தைகளிலும் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அழகுசாதனப் பொருட்களுக்கான ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ‘க்விக் காமர்ஸ்’ (Quick Commerce) வேகமாக அதிகரித்து வரும் சூழலில் இந்தப் புள்ளிவிவரங்கள் கவலையளிப்பதாக உள்ளன. அண்மையில் மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய சோதனைகளில், தொகுதி எண் மற்றும் காலாவதி தேதி இல்லாத சுமார் 1.52 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, நாக்பூரில் விற்கப்பட்ட சரும நிறத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 752 மடங்கு அதிகமாகப் பாதரசம் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தப் பொருள் உடனடியாகத் தடை செய்யப்பட்டது. இருப்பினும், இந்த ஆய்வில் அழகுசாதனப் பொருட்களால் யாருக்கும் கடுமையான நோய்கள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை.

எனவே, நுகர்வோர் அழகுசாதனப் பொருட்களை வாங்குவதற்கு முன் அதன் பேக்கேஜிங், உற்பத்தியாளர் முகவரி, தொகுதி எண் மற்றும் காலாவதி தேதிகளைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, ஆன்லைனில் அறிமுகமில்லாத விற்பனையாளர்களிடம் இருந்தோ அல்லது வழக்கத்திற்கு மாறாக மிகக் குறைந்த விலையிலோ பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.