கான்பூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த திருடன், அலமாரியின் லாக்கரை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த உத்தம் சிங் பதௌரியா என்பவரின் வீட்டில் ஆகஸ்ட் 16-ம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் இருந்த அறைக்குள் புகுந்த திருடன், அங்கிருந்த அலமாரியை குறிவைத்துள்ளார். பின்னர் அலமாரியின் லாக்கரை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தேடியுள்ளார்.
லாக்கரை உடைத்த பிறகுதான் அதில் பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. லாக்கருக்குள் துணிகள் மட்டுமே இருந்ததால், திருடனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டதே தவிர, எந்தவிதமான விலை உயர்ந்த பொருட்களையும் அவனால் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதையடுத்து அவசரமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவன் தப்பிச் செல்லும்போது ஒரு முக்கியமான தடயத்தை வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளான்.
திருட்டு முயற்சியின்போது திருடன் வைத்திருந்த கூர்மையான கத்தி சம்பவ இடத்திலேயே கிடந்துள்ளது. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேபோல், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் திருடனின் உருவமும் முகமும் தெளிவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கில் இரண்டு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. CCTV காட்சிகளை ஆய்வு செய்து திருடனை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருடன் எந்த வழியாக வீட்டுக்குள் நுழைந்தான், பின்னர் எந்தப் பாதையில் தப்பிச் சென்றான் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் காண முடியும் என போலீசார் நம்புகின்றனர். லாக்கரை உடைத்தும் எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல முடியாமல் வெறுங்கையுடன் தப்பிய திருடன், தனது கத்தியையும் விட்டுச் சென்றிருப்பது இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் கான்பூரில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
