இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் பரமோர் பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரும் மேகவெடிப்பு காரணமாகப் பழனி நதி ஆக்ரோஷமாகப் பெருகியோடியது. அப்போது அவ்வழியாகச் சென்ற திருமண ஊர்வலம் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், கிராமவாசி ஒருவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மணமகனைத் தனது முதுகில் சுமந்து பாதுகாப்பாகக் கரையேற்றிய நெகிழ்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பா மாவட்டம் பரமோர் பகுதியில் உள்ள பத்ம கிராம் பகுதியில் நள்ளிரவில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பழனி ஓடை திடீரென உக்கிரமாகப் பெருகியோடியது. கண்கிமைக்கும் நேரத்தில் ஓடை பெருவெள்ளமாக மாறியதால், திருமண ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களும் கிராம மக்களும் நதியின் இரு கரைகளிலும் சிக்கித் தவித்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Himachal (@himachal)

உச்சக்கட்ட வேகத்தில் பாய்ந்தோடிய வெள்ளத்தைக் கண்டு அதனைத் தாண்டிச் செல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை. ஒவ்வொரு அடியும் மரண பயத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தச் சூழல் மிகவும் பயங்கரமாக இருந்தது. இந்த இக்கட்டான சூழலில்தான்  சுரேஷ் குமார் என்பவர் அரிய வகை தைரியத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தினார். தனது சொந்த உயிரைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், திருமணமான மணமகனைத் தனது முதுகில் சுமந்தபடி ஆக்ரோஷமாகப் பாய்ந்தோடிய வெள்ளத்தைக் கடந்து மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

சுரேஷின் இந்தத் துணிச்சலான செயல், மணமகனுக்கு ஏற்படவிருந்த பெரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தியது. அங்கு இருந்த பொதுமக்கள் பலரும் சுரேஷின் இந்தச் சாதனைத் துணிச்சலைப் பாராட்டித் தள்ளினர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை மஞ்சு சத்ரியா என்பவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தச் சம்பவம் பத்ம கிராம் பஞ்சாயத்து மக்களின் நீண்டகால துயரத்தையும் கோரிக்கையையும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பழனி நதியின் மீது நிரந்தரப் பாலம் இல்லாததே மழைக்காலங்களில் மக்கள் படும் இன்னல்களுக்குக் காரணம் என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேகவெடிப்பு போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் உயிருக்கு உலைவைக்கும் சாகசமாக மாறுவதாகவும், எனவே ஆபத்து காலத்தில் மக்களின் உயிரைக் காக்க உடனடியாக அந்த நதியின் மீது நிரந்தரப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.