பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் முகேரியன் பகுதியில் ஒரு இளம் பெண்ணின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் ஒருவர், தனது மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் முழுமையான விவரங்களை இங்கே பார்ப்போம்.
அதாவது சுனேஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அமர்ஜித் சிங்குக்கும், ரமா என்பவருக்கும் 8 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணமான நாள் முதல் அமர்ஜித் சிங் தனது மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு அமர்ஜித் சிங் ராணுவத்தில் இருந்து விடுமுறை பெற்று வீடு திரும்பியுள்ளார். அன்று இரவு அவருக்கும் ரமாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் அதிகாலை 4 மணியளவில், ரமா மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்குச் சென்று பார்த்த ரமாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடல் முழுவதும் இருந்த ஆழமான காயங்களைக் கண்டு அதிர்ந்துபோயினர். மாடியில் இருந்து விழுந்தால் ஏற்படுவதை விட, உடல் முழுக்க வன்முறைக் காயங்கள் இருந்ததால், கணவன் கூறிய ‘விபத்து’ கதையில் அவர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. உடனே இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில், காவல் நிலையப் பொறுப்பாளர் ஹர்பிரேம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, உயிரிழந்த ரமாவின் கணவரும் ராணுவ வீரருமான அமர்ஜித் சிங், அவரது மாமா குல்தீப் கூகி மற்றும் அத்தை சோனியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டின் பேரில் ராணுவ வீரர் அமர்ஜித் சிங்கை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அதேசமயம், தலைமறைவாக உள்ள குல்தீப் கூகி மற்றும் சோனியாவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தாய் மரணமடைந்து, தந்தை கைது செய்யப்பட்டுள்ளதால் இரண்டு சிறு குழந்தைகளும் தவித்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான முழு உண்மையான காரணமும், மருத்துவ ரீதியான சாட்சிகளும் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
