கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்தபோது ஏற்பட்ட சாதாரண கிண்டல் விவகாரம், கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. தன் நண்பன் தன்னை கிண்டல் செய்த ஆத்திரத்தில், 3 ஆண்டு கால நட்பு என்றும் பாராமல் இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சுஹைல் (25) என்பவரும்  ரப்ப்பான் என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுஹைல், ரப்ப்பான் மற்றும் அவர்களது சில நண்பர்கள் ஒரு கடைக்கு அருகில் அமர்ந்து தங்களது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த சுஹைல், ரப்ப்பானை நோக்கிச் சில கிண்டல் கேலிகளைச் செய்துள்ளார். ஆரம்பத்தில் இதனைப் பொறுத்துக்கொண்ட ரப்ப்பான், சுஹைல் தொடர்ந்து தன்னைத் தாழ்த்திப் பேசியதால் ஆத்திரமடைந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

ஆத்திரம் தலைக்கேறிய ரப்ப்பான், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து சுஹைலைத் தாறுமாறாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுஹைலை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் இது பணத் தகராறு காரணமாக நடந்த கொலை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இருப்பினும், திலக் பூங்கா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திலிருந்த மற்ற நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர்தான், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கிண்டலால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் இக்கொலை அரங்கேறியது தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட போலீசார், தலைமறைவாக இருந்த ரப்ப்பானைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.