பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மனைவி சந்தேகமான முறையில் உயிரிழந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஞ்சா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு நாட்களில் கணவன், மனைவி என அடுத்தடுத்து இரண்டு உயிர்கள் பறிபோனதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முதலில் பிரியங்கா தேவி என்ற நேஹா என்ற பெண் சந்தேகமான சூழ்நிலையில் உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி சுமார் 5 ஆண்டுகள் ஆனதாகவும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த அவரது தாய் வீட்டினர், வரதட்சணை தொடர்பாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அவரது கணவர் சுஜித் பிரசாத் வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரியங்கா தேவி உயிரிழந்த மறுநாளே சுஜித் பிரசாத்தும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மாஞ்சா பகுதியிலுள்ள சந்தன் டோலா தோட்டத்தில் மரத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் மரணத்துக்குப் பிறகு தன் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் ஏற்பட்ட அச்சத்தில் சுஜித் இந்த முடிவை எடுத்தாரா அல்லது அவரது மரணத்துக்குப் பின்னால் வேறு காரணம் உள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை. இரு மரணங்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அடுத்தகட்ட தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
