உணவு விநியோகச் செயலிகள் மூலம் உணவை ஆர்டர் செய்து, அது தங்களின் இருப்பிடத்திற்கு வரும் வரை காத்திருப்பது இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் சாதாரணமாகிவிட்டது. இருப்பினும், மழை, போக்குவரத்து நெரிசல் மற்றும் தொலைவு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் டெலிவரி ஊழியர்களின் சிரமத்தை உணராமல், சிலர் அவர்களிடம் காட்டும் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ‘கங்கா ஹைட்ஸ்’ குடியிருப்பு வளாகத்தில், உணவு கொண்டு வருவதில் சிறு தாமதம் ஏற்பட்டதற்காக டெலிவரி ஊழியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர் உணவை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட குடியிருப்புக்குச் சென்றபோது, உணவை ஆர்டர் செய்த நபரும் அவரது நண்பர்களும் சேர்ந்து, தாமதத்திற்குக் காரணம் கேட்டு அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்பட்டதாக அந்த ஊழியர் எவ்வளவோ அமைதியாக விளக்கியும், அதையேற்க மறுத்த அந்த கும்பல் ஆத்திரமடைந்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்புப் பகுதியிலேயே வைத்து, அந்த அப்பாவி ஊழியரை அவர்கள் தாக்கிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அச்சு அசலாகப் பதிவாகியுள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “பசியைப் போக்க ஓடோடி வரும் ஊழியர்களுக்கு இதுதான் நாம் தரும் மரியாதையா?” என்று நெட்டிசன்கள் பலரும் அந்த அராஜக கும்பலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீரட் காவல்துறையினர், வைரல் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, டெலிவரி ஊழியரைத் தாக்கிய நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
