ராஜஸ்தானில் காதலி முஸ்கான் என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, ஆதாரங்களை அழிக்க சடலத்தைக் காட்டு விலங்குகளின் குகை அருகே வீசிய காதலனைப் பிடிக்கக் காவல்துறை 7,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று துரத்திப் பிடித்துள்ளது. பிவாடியில் உள்ள ராம்புரா மலைப் பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை ஆய்வு செய்தபோதே இந்த அதிர்ச்சி பின்னணி தெரியவந்தது.

கடந்த 2026 ஜனவரி முதல் ஷாபாஸ் கான் என்ற முகமது சாகர் அலி என்பவருடன் முஸ்கான் தொடர்பில் இருந்துள்ளார். ஜூன் 19-ஆம் தேதிக்குப் பிறகு முஸ்கானின் மொபைல் போன் அணைக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் தேடியபோது ஷாபாஸ் எதையும் கூற மறுத்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் கண்டெடுத்த அழுகிய சடலத்தைப் பரிசோதித்த குடும்பத்தினர், அது முஸ்கான் தான் என்பதை உறுதி செய்தனர்.

காவல்துறையின் விசாரணையில், முஸ்கானை ராம்புரா மலைக்கு வரவழைத்துத் தலையில் கல்லால் தாக்கி ஷாபாஸ் கொலை செய்தது தெரியவந்தது. கொலையை மறைக்கவும் அடையாளங்களை அழிக்கவும் காட்டு விலங்குகள் உடலைத் தின்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சடலத்தைக் குகைக்கு முன்னால் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார். ஆனால், அந்தத் திட்டம் தோல்வியடைந்து சடலம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்கக் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் எனப் பல மாநிலங்களில் உள்ள 325 இடங்களுக்கு மேல் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பல இடங்களில் மாறுவேடத்தில் சென்று தகவல்களைச் சேகரித்தனர்.

சுமார் 7,000 கிலோமீட்டர் தூரம் தொடர்ச்சியாகத் துரத்திய பிறகு, பீகாரின் சஹர்சா மாவட்டத்தில் வைத்து முக்கியக் குற்றவாளியான ஷாபாஸ் கானைக் காவல்துறையினர் இறுதியாகக் கைது செய்தனர். இந்தச் கொடூரக் கொலையில் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவரையும பிடிக்கும் முயற்சியில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.