இன்றைய அவசரமான நவீன காலத்தில் பலரும் சொந்த ஊரை விட்டு வேலைக்காக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தனித்தனியாக வாழும் சூழலில், ஆந்திராவில் 83 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ‘மெகா’ கூட்டுக்குடும்பம் 6 தலைமுறைகளாக ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது. அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தின் மூத்த மூத்த உறுப்பினரான முத்தியாலப்பா என்பவர் தபால் துறையில் பணியாற்றுகிறார், மற்ற அனைவரும் குடும்பத் தொழிலான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை கவனித்து வருகின்றனர்.

பரந்து விரிந்த இந்த ஆலமரக் குடும்பத்தில் 4 மைத்துனர்கள், 6 நாத்தனார்கள், 14 மருமகள்கள், 32 குழந்தைகள் என மொத்தம் 83 பேர் அருகருகே உள்ள 3 பெரிய வீடுகளில் வசித்து வருகின்றனர். இன்றைய காலத்திலும் சிலிண்டர், மிக்சி போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தாமல், பெரிய விறகு அடுப்பு மற்றும் அம்மிக்கல்லைப் பயன்படுத்தித் தினமும் சமைக்கின்றனர். மதிய உணவிற்கு 50 கிலோ அரிசி சாதமும், இரவு சப்பாத்திக்கு 15 கிலோ கோதுமை மாவும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு பெரிய செம்மறி ஆடு மற்றும் 10 கிலோ கோழிக்கறியை சமைத்து உண்கின்றனர்.

இவர்கள் விவசாயத்தில் மிளகாய், தக்காளி, பப்பாளி, நிலக்கடலை போன்றவற்றைச் சாகுபடி செய்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களின் உழைப்பால் ஆரம்பத்தில் 65 ஏக்கராக இருந்த நிலம் தற்போது 120 ஏக்கராக உயர்ந்துள்ளது. இதுதவிர வாடகைக்கு விடுவதற்காக 4 பேருந்துகளையும் சொந்தமாக வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் 9 திருமணங்களை நடத்தி சாதனை படைத்த இந்த குடும்பத்தில், உறவுமுறை ஒத்துவந்தால் குடும்பத்திற்குள்ளேயே திருமணங்களை முடித்து வைக்கின்றனர்.

வீட்டு குழந்தைகள் அனைவரும் பாகுபாடின்றி அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில்தான் பயில்கின்றனர். 83 பேர் வசித்தாலும் 3 வீடுகளுக்கும் சேர்த்து மாத மின்சாரக் கட்டணம் வெறும் ரூ.2,700 மட்டுமே வருகிறது. இயற்கையான சூழலில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து வாழ்வதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்து, எதிர்காலத்திலும் இதேபோல் தொடர விரும்புவதாகக் குடும்பத் தலைவர் முத்தியாலப்பா பெருமிதத்துடன் கூறுகிறார். சண்டை சச்சரவுகளின்றி ஒருவரையொருவர் அனுசரித்து வாழும் இந்த ‘மெகா’ குடும்பத்தின் ஒற்றுமை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.