மத்தியப் பிரதேசத்தில் கல்வித்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் முறையான ‘இணைய வழி வருகைப் பதிவேடு’ கிராமப்புற ஆசிரியர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சரியாக செல்போன் சிக்னல் கிடைக்காத காரணத்தினால், ஆசிரியர்கள் பள்ளி கட்டிடத்தின் கூரை மீது ஏறி நின்று வருகைப் பதிவு செய்யும் பகீர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்ராபூர் மாவட்டத்தில் உள்ள டட்டம் ஜன் சிக்ஷா மையத்திற்குட்பட்ட கிராமப்புறப் பள்ளி ஒன்றில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலில் உள்ளது.

ஆனால், தொலைதூர கிராமப் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளில் செல்போன் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் இணைப்பு மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இதனால் பள்ளி அறைக்குள் அமர்ந்து கொண்டு ஆன்லைனில் வருகைப் பதிவை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகளின்படி, ஆசிரியர்கள் தங்களது செல்போனில் சிக்னலைப் பிடிப்பதற்காகப் பள்ளி கட்டிடத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று போராடும் பரிதாப நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து வேதனை தெரிவிக்கும் ஆசிரியர்கள், “ஆன்லைன் வருகைப் பதிவுக்கு உரிய நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகையைப் பதிவு செய்யாவிட்டால் எங்களது சம்பளம் பிடிக்குமா என்ற பயம் எங்களை வாட்டுகிறது. நெட்வொர்க் கிடைக்காதது எங்கள் தவறு கிடையாது, ஆனால் இதற்கான விலையை நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்குரிய அடிப்படை வசதிகளான இன்டர்நெட் மற்றும் சிக்னல் வசதிகளை கிராமப்புறப் பள்ளிகளில் செய்து கொடுக்காமல் இந்த முறையை அவசரமாக திணிப்பது முறையல்ல என்று அவர்கள் குரல் எழுப்புகின்றனர். நெட்வொர்க் இல்லாத பள்ளிகளில் இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.