திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பேச்சு தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் செய்த நன்மைகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று அவர் ஆவேசமாகப் பேசியது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் பேசத் தொடங்கிய ஆர்.எஸ். பாரதி, 1996 முதல் 2001 வரை செய்த சாதனைகளைச் சுட்டிக்காட்டினார். அப்போது தேர்தலில் தோல்வியடைந்தபோது கலைஞர் கருணாநிதி தெரிவித்த வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவர், “அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்போதுதான் வாய்க்கால் வெட்டிக்கொண்டு இருக்கிறோம். வாய்க்கால் வெட்டி விட்டால் தண்ணீர் தானாக வரும்” என்று கலைஞர் உற்சாகமாகச் சொன்னதை இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களின் வரி உயர்வு குறித்த புகார்களைச் சாடினார். “வீட்டு வரி எல்லாம் உயர்ந்துவிட்டது என்று பேசுகின்றனர்; அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை?” என்று கேள்வி எழுப்பிய அவர், இன்றைய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்துக் கடுமையாக விமர்சித்தார். ஏசி பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கட்சி வரலாற்றையும் சமத்துவத்தையும் இளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பேச்சின் உச்சகட்டமாக சைதாப்பேட்டை தொகுதி நிலவரம் குறித்து ஆர்.எஸ். பாரதி வெளிப்படையாகப் பேசினார். “சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால்கூட நாம் வெற்றி பெற்று இருப்போம். ஆனால் அவர்கள் வாக்களிக்கவில்லை. அத்தகையவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று வெளிப்படையாகச் சொல்கிறேன்” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

உயிரைக் காப்பாற்றுவது என்பது சாதாரண காரியம் அல்ல என்றும், மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மக்களுக்காகச் செய்த தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், “இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்; கட்சிக்காரர்களுக்குச் செய்யுங்கள், அது போதும். இனி ஒரு 5 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுப்போம்” என்று கூறிய அவரது பேச்சு தற்போது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.