காதலின் பெயரால் தொடங்கிய ஒரு பந்தம், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இத்தனை கொடூரமான விளிம்பில் வந்து நிற்கும் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த சனிக்கிழமை காலை 29 வயது மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியை ஷாலினி யாதவ் என்பவரின் சடலம் குளியலறையில் இருந்த தண்ணீர் டப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் இருந்தது.
மறைந்த ஷாலினி யாதவ் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் திலீப் யாதவ், ஒரு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். குடும்பத்தினரின் தகவல்படி, இருவரும் கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். ஷாலினியின் பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்க முற்பட்டபோது, ஷாலினி தனது தந்தை தர்மராஜிடம் காதலிப்பதை தைரியமாகத் தெரிவித்தார்.
மகளின் விருப்பத்திற்குத் தடை போட விரும்பாத தந்தை, இருவரின் காதலையும் ஏற்று கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியன்று இருவருக்கும் விமரிசையாகத் திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும் உள்ளார்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களின் வாழ்க்கையில், கடந்த சில மாதங்களாக விரிசல் விழத் தொடங்கியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திலீப் யாதவ் தனது சகோதரர்களான பூபேந்திரா மற்றும் சந்தீப் ஆகியோருடன் சேர்ந்து, கூர்மையான ஆயுதங்களால் ஷாலினியைத் தாக்கி கொலை செய்துவிட்டதாக மரணமடைந்த ஆசிரியை தாயார் ஃபுல்மதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொலையை மறைப்பதற்காகவே உடலைக் குளியலறை டப்பில் வீசியிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், அங்கு பதிவான தடயங்களைச் சேகரித்து சடலத்தை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். ஃபதேபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிமன்யூ மங்களிக் கூறுகையில், ஷாலினியின் தலை மற்றும் கால்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் கணவர் திலீப் யாதவை போலீஸார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்கள், உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவிலேயே வெளிவரும்.
