உங்களுக்குக் கை, கால் மூட்டு வலி அதிகமாக இருக்கிறதா? அல்லது அடிக்கடி மழை பெய்வதால் சளி, இருமல் தொல்லையால் சிரமப்படுகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் வீட்டில் இருக்கும் முருங்கைக்கீரையையும் கொள்ளுப் பருப்பையும் வைத்துச் சத்தான சூப் செய்து குடியுங்கள். இந்தச் சூப் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருவதோடு, ரத்தத்தையும் நன்றாக ஊற வைக்கும்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு, பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய், கிராம்பு, பட்டை, உப்பு மற்றும் எலுமிச்சை பழம்.

செய்முறை:

முதலில் கொள்ளுப் பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து, நீரால் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு குக்கரில் 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளைச் சேர்த்து 3 முதல் 4 விசில் விட்டு வேகவைக்க வேண்டும். விசில் போனதும், அதனுடன் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, சீரகம், மிளகு, மஞ்சள் தூள் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து மீண்டும் 2 விசில் விட்டு இறக்கவும்.

வெந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, காய்கறிகளை மட்டும் மிக்ஸியில் போட்டுச் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த விழுதையும் வடிகட்டி சாறு எடுத்து, ஏற்கனவே வடிகட்டி வைத்துள்ள தண்ணீருடன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கிராம்பு, பட்டை, இடித்த சின்ன வெங்காயம் மற்றும் முருங்கை இலைகளைச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தயாரித்து வைத்துள்ள சூப் சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை தூவினால் சுவையான, சத்தான முருங்கைக்கீரை கொள்ளு சூப் தயார்!