உணவகங்களுக்குச் சென்று நிம்மதியாக உணவு அருந்திவிட்டு வர நினைக்கின்ற சராசரி மக்களுக்கு, எதிர்பாராத விதமாக அநியாயக் கட்டணம் விதிக்கப்படும்போது ஏற்படும் ஆத்திரமும் ஏமாற்றமும் விவரிக்க முடியாதவை.

அந்த வகையில், கேரளாவில் உள்ள புகழ்பெற்ற ‘சோறும் மீனும்’ என்ற உணவகத்தில், 200 ரூபாய் என விலை குறிக்கப்பட்ட மீன் உணவிற்கு, பில் போடும்போது 300 ரூபாய் எனக் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், வாடிக்கையாளருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே பெரும் வாக்வாதம் ஏற்பட்டுள்ளது.

இறுதியில் அது பயங்கரக் கைகலப்பாக மாறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உணவு உண்டு முடித்த பிறகு கையில் வழங்கப்பட்ட பில்லைப் பார்த்த வாடிக்கையாளர், மெனு கார்டில் இருந்த விலையை விட 100 ரூபாய் கூடுதலாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு உணவக நிர்வாகத்திடம் நியாயம் கேட்டுள்ளார்.

அதற்கு உணவக ஊழியர்கள் முறையான விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும், நியாயமாகக் கேட்கப்பட்ட கேள்வியை ஏற்க மறுத்து வாடிக்கையாளரிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளருக்கும் ஊழியர்களுக்கும் இடையே சண்டை மூண்டு, ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் அளவுக்குச் சூழல் கைமீறிச் சென்றது.

இந்த மோதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான சில மணிநேரங்களிலேயே காட்டுத்தீ போல் பரவி, நெட்டிசன்கள் இடையே காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல உணவகங்கள் இதுபோன்று மறைமுகக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் விலையை விதித்து நுகர்வோரை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்றும், பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தை இப்படி அநியாயமாகப் பறிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.

மேலும், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இதுபோன்ற உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

“>