வெளிநாட்டிற்குச் சென்று படித்தால் வாழ்க்கை பிரகாசமாகிவிடும், கைநிறையச் சம்பாதிக்கலாம் என்ற கனவோடு இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் கடல் கடந்து பயணிக்கின்றனர். ஆனால், அந்த வண்ணமயமான கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் கசப்பான நிஜத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது இந்தச் சம்பவம்.
தனது மகனின் உயர்கல்விக்காகக் பெற்றோர் ரூபாய் 50 லட்சம் வரை கடன் வாங்கி, அனைத்துச் சேமிப்பையும் செலவழித்துக் கனடாவிற்கு அனுப்பி வைத்த நிலையில், அங்குச் சென்ற பிறகு அவர் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல், பல குடும்பங்களின் கண்களைத் திறப்பதாக அமைந்துள்ளது.
கனடாவில் பட்டம் பெற்ற பிறகு வேலை தேடி அலையும் அந்த இளைஞர், அங்குள்ள கடுமையான வாழ்வாதாரச் செலவுகள் குறித்துத் தனது மனவேதனையைப் பகிர்ந்துள்ளார். அதிகப்படியான வீட்டின் வாடகை, அன்றாட உணவிற்கான செலவுகள், வரிகள் மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவற்றைக் கழித்த பிறகு, கையிருப்பில் எஞ்சும் பணம் மிகவும் சொற்பமானது என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையியல் இந்தியாவில் ஒரு நடுத்தர வேலையில் இருந்தபோதே இதைவிடச் அதிகமாகச் சேமிக்க முடிந்ததாகவும், வெளிநாடு சென்று வாழும் வாழ்க்கை தூரத்துப்பச்சையாக மட்டுமே தெரிகிறது என்றும் அவர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் “வெளிநாட்டுக்குப்போய் சம்பாதிப்பது என்பது நேரில் பார்க்கும் வரை தான் கனவு போலிருக்கும், உள்ளே வந்த பிறகுதான் அதிலுள்ள நரக வாழ்க்கை புரியும்” என்ற அந்த இளைஞரின் கூற்று, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பெற்றோர்கள் தங்களின் ஆயுள் காலச் சேமிப்பையெல்லாம் கொட்டி, லட்சக்கணக்கில் கடன் வாங்கிப் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன், அங்குள்ள தற்போதைய வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரச் சூழலை தீர ஆராய வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் அழுத்தமாக உணர்த்துகிறது.
