உலகளாவிய வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதோடு, அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் இதே போக்கில் நீடித்தால் எதிர்காலத்தில் மனிதகுலம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரபல அறிவியல் இதழான ‘நேச்சர் கிளைமேட் சேஞ்ச்’ வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடுமையான வெப்பம் நிலவும் நேரம் நாளுக்கு சுமார் 4 மணி நேரம் வரை அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழல் தொடர்ந்தால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, வெளியில் நடமாடுவதும் கடினமானதாக மாறிவிடும் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, உலக அளவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்தான் இந்த தீவிர வெப்பத்தின் தாக்கத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பூமி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில், வரும் தலைமுறையினர் கற்பனை செய்ய முடியாத அளவுக்குக் கடுமையான தட்பவெப்பச் சூழலைச் சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கார்பன் உமிழ்வைக் உடனடியாகக் குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.
