கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற பீச்சுபள்ளி கிருஷ்ணா நதி புஷ்கர காட் மற்றும் ஆஞ்சநேய சுவாமி கோயில் பகுதியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நதிக்கரையில் சாவகாசமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு அன்று ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே திடீரென கிருஷ்ணா நதியிலிருந்து பிரம்மாண்டமான முதலை ஒன்று ஊர்ந்து வெளியேறியது. மக்கள் நிறைந்த கூட்டத்திற்கு அருகில் முதலை வந்ததைப் பார்த்ததும், அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதறியடித்து ஓடினர். கூட்ட நெரிசலில் அலறல் சத்தம் எதிரொலிக்க, அந்த முதலை நேராக அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்குள்ளும் புகுந்து கொண்டது. இதனால் நதிக்கரையில் பெரும் பரபரப்பும் பீதியும் தொற்றிக் கொண்டது.

 

பொதுவாக இது போன்ற ஆபத்தான விலங்குகளைக் கண்டால் அனைவரும் ஓட்டம் பிடிப்பதுதான் வழக்கம். ஆனால், இந்தச் சம்பவத்தில் ஒரு சுவாரசியமான திருப்பம் அரங்கேறியது. அதாவது  முன்னோர்களுக்குத் திதி மற்றும் சடங்குகள் செய்யும் அர்ச்சகரான அனில் சர்மா  கொஞ்சமும் பயப்படாமல் அந்த முதலைக்கு அருகில் சென்று சிறப்பு பூஜைகளைச் செய்யத் தொடங்கினார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அனில் சர்மா முதலையின் முன்பாக அமர்ந்து கொண்டு மந்திரங்களை முழங்கியபடியும், அதன் மீது அபிஷேகம் செய்தபடியும் ஆன்மீகச் சடங்குகளைத் தீவிரமாகச் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்தச் செயல் குறித்து விளக்கம் அளித்த அனில் சர்மா, “இந்து புராணங்களின்படி முதலை என்பது மழையின் கடவுளான வருண பகவானின் வாகனமாகக் கருதப்படுகிறது. எனவேதான் இந்த எதிர்பாராத நிகழ்வை மங்களமாக கருதி, நல்ல மழை பெய்து மக்களுடன் நாடு செழிக்க வேண்டும் என்று அந்த முதலைக்குச் சிறப்புப் பிரார்த்தனை செய்தேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிக்கக்கூடும் என்று ஏற்கனவே காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

உடனடியாக இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கயிறுகளைக் கொண்டு சாமர்த்தியமாக அந்த முதலையைப் பிடித்த வனத்துறையினர், யாருக்கும் எந்தவித ஆபத்தும் நேராதவாறு பாதுகாப்பான முறையில் மீண்டும் கிருஷ்ணா நதியிலையே  பத்திரமாகக் கொண்டுபோய் விட்டனர்.