தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 9.30 மணிக்குச் சபை கூடியதும், மறைந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் பொது விவாதத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுந்து பேசுகையில், ஆட்சியாளர்களைக் கிண்டல் செய்யும் வகையில், “நீங்கள் எல்லாம் ரொம்ப ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்; ஆனால், நாங்கள் அனைவரும் கடும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், முதலமைச்சரின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி காரசாரமான பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், சின்னதாக ஒரு வாய்க்கால் பிரச்சினை என்றால்கூட, இன்று காலையில்கூட போன் செய்து ‘அந்தப் பிரச்சினை சரியாகிவிட்டதா?’ என்று விசாரிக்கும் முதல்-அமைச்சர்தான் இப்போது இருக்கிறார்! நீங்களாவது கடந்த 5 வருஷம் டென்ஷனாக இருந்தீர்கள்; ஆனால், நாங்கள் தினம் தினம் ஒவ்வொரு விஷயத்திற்கும் டென்ஷனாக இருக்கிறோம். எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் மக்கள் நலனில் எங்களுக்கு அப்படியொரு பயமும் பொறுப்பும் இருக்கிறது” என்றார்.
இதற்கிடைப் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் ‘பிசி ஆனந்தாக’ வலம் வருகிறார். அனைத்துக் கட்சித் தொண்டர்களும் அவரைத்தான் கவனித்து வருகின்றனர். புதிதாக வந்த இயக்கம் இது… இனிமேல் தான் உங்களுக்கு இதன் கஷ்டங்கள் எல்லாம் தெரியப்போகிறது. பேசுவது மிகவும் எளிது; ஆனால், அதைச் செயல்படுத்தும் போதுதான் அதன் நிஜக் கஷ்டங்கள் என்னவென்று புரியும்” என்று பேசினார்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இந்த கமெண்ட் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், சிறிது நேரம் கலகலப்பான சூழலையும் உருவாக்கினார். மேலும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசும்போது முதலமைச்சர் விஜய் சிரித்தபடி அதனை கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது
