உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் பல்லவி சிங். இவர் டிண்டர் உள்ளிட்ட பல்வேறு டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பல ஆண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண நட்பாகப் பழகுவது போல நடித்து, பின்னர் அவர்களைத் தனது நெருக்கமான உறவுக்குள் வீழ்த்துவதில் இவர் கைதேர்ந்தவராகச் செயல்பட்டுள்ளார்.

தனது வலையில் விழும் ஆண்களுடன் ரகசிய அறைகளில் சந்தித்து தனிப்பட்ட முறையில் நேரத்தைச் செலவிடும் பல்லவி சிங், அந்த சமயத்தில் அவர்களுடன் இருக்கும் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி அந்த ஆண்களிடம் மிரட்டல் விடுத்துப் பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தான் கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால், “உங்களுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துப் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி போன்ற கடுமையான குற்ற வழக்குகளில் உங்களைச் சிக்க வைப்பேன்” என்று மிரட்டி வந்துள்ளார்.

இவரது இந்த கொடூர வலையில் சிக்கிய பல முன்னணித் தொழில் அதிபர்களும், வசதியான பணக்காரப் புள்ளிகளும் காவல் துறை விசாரணை மற்றும் வழக்குகளுக்குப் பயந்து இவரிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர். ஒருவேளை பணம் தராமல் இவருக்குத் ‘டிமிக்கி’ கொடுக்க முயலும் ஆண்கள் மீது, தாமாகவே முன்வந்து காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பலகட்டப் புகார்களை அளித்துச் சிக்க வைத்ததும் தற்போது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு நபர்களை மிரட்டி மிரட்டியே ரூ.6 கோடிக்கும் அதிகமான பணத்தைக் பல்லவி சிங் சுருட்டி குவித்து வந்தது தெரியவந்துள்ளது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த ஒட்டுமொத்த மோசடி நெட்வொர்க்கும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கிடையில், ஆண்களை ஏமாற்றிச் சேர்த்த கொள்ளை பணத்தின் மீது கொண்ட வெறியால், தனது படுக்கை முழுவதும் பணக்கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டு அதன் மீது படுத்து இருப்பது போன்ற அதிர்ச்சிப் புகைப்படம் ஒன்றை பல்லவி சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது. மேலும், மற்றொரு புகைப்படத்தில் கையில்  துப்பாக்கியுடன் அவர் போஸ் கொடுத்துள்ள காட்சியும் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மெகா மோசடித் திட்டத்தில் பல்லவி சிங்குக்கு உறுதுணையாக இருக்க மேலும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உடந்தையாகச் செயல்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.