நம் உடலில் இதயம் எந்தளவுக்கு மிக முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறதோ, அதே அளவுக்கு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் மிக மிக அவசியமானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, மாரடைப்பு அல்லது இதய கோளாறுகள் குறித்து காட்டும் கவனத்தில் பாதியைக்கூட பலர் மூளை ஆரோக்கியத்தில் காட்டுவதில்லை. இந்த அலட்சியமே பலருக்குப் பக்கவாதம்  மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

இன்றைய அவசரமான நவீன வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், போதிய தூக்கமின்மை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகிய காரணங்களால் மூளை தொடர்பான பாதிப்புகள் சிறு வயதினரிடையே கூட அதிகரித்து வருகின்றன. உடலின் அனைத்துச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் ‘மாஸ்டர் கம்பியூட்டர்’ போன்ற மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் சீராகக் கிடைப்பதை உறுதிசெய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை மிகவும் அவசியம். அதேபோல், உயர் ரத்த அழுத்தம்  , சர்க்கரை நோய்  மற்றும் அதிக மன அழுத்தம் ஆகியவை மூளை நரம்புகளை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இவற்றை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இதயத்தைப் போலவே மூளையின் ஆரோக்கியத்தையும் தொடக்கத்திலேயே கவனித்து பராமரிப்பது அவசியம். லேசான தலைச்சுற்றல், தீவிர தலைவலி, கை கால்களில் மரத்துப் போகும் தன்மை அல்லது பேச்சு தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதைச் சாதாரணமானதாகக் கடந்து செல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.