உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் மனைவியுடனான கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்துள்ளனர். புதானா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஹாசிம் என்பவரை போலீஸார் சுற்றிவளைத்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவரை போலீஸார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல் நிலைய பகுதியில் தாலிப் என்ற இளைஞர் கடந்த ஒரு நாளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், தாலிப்பின் மனைவி மீனாவுடன் ஹாசிமுக்கு தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாகவே தாலிப் கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸார் சந்தேகித்துள்ளனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹாசிமை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், லுஹ்சானா சாலையில் ஹாசிம் தப்பிச் செல்ல முயல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸார் அவரை சுற்றிவளைத்தபோது, துப்பாக்கியால் சுட்டதாகவும், தற்காப்புக்காக போலீஸார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காலில் காயமடைந்த ஹாசிம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஹாசிமிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கில் தாலிப்பின் மனைவி மீனாவும் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்கான திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது, இதில் மீனாவின் பங்கு என்ன என்பது குறித்து ஹாசிமிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
