இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதிலிருந்து விடுபட பல்வேறு வழிகளைத் தேடி அலைபவர்களுக்கு, மிகச் சிறந்த மற்றும் எளிமையான தீர்வாக உடற்பயிற்சி அமைகிறது. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உடற்பயிற்சி செய்யும்போது நமது மூளையில் ‘எண்டார்பின்’  எனப்படும் வேதிப்பொருள் சுரக்கிறது. இது மனநிலையை உடனடியாக உயர்த்தி, உடலுக்கும் மனதிற்கும் ஒருவித மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. மேலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் ‘கார்டிசோல்’   என்ற ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது. இதனால், பதற்றம் தணிந்து உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் மணிக்கணக்கில் கடினமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மிதமான உடற்பயிற்சியோ, வேகமான நடைபயிற்சியோ அல்லது யோகாவோ செய்தாலே போதுமானது. வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தாலே உடலில் நல்ல மாற்றத்தையும் மன அமைதியையும் உணர முடியும்.

உடற்பயிற்சியை வெறும் உடல் எடையைக் குறைப்பதற்கான வழியாக மட்டும் பார்க்காமல், மன நலனைப் பேணும் ஒரு தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நடைபயிற்சி, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் என உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு பயிற்சியைத் தேர்ந்தெடுத்து இன்று முதலேத் தொடங்குங்கள்; மன அழுத்தமில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழுங்கள்.