மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் சுமார் 40 குழந்தைகள் மற்றும் இளைஞர்களைத் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த சேத்தன் கோலி என்ற நபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பண ஆசை காட்டி அழைத்துச் சென்று அசிங்கமான செயல்களில் ஈடுபடுத்தி வந்த அந்த நபர், கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்தத் கொடூரமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் கைப்பேசையை ஆய்வு செய்த காவல்துறையினர், அதில் இருந்த 200 ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்துப் பதைபதைத்துப் போயுள்ளனர்.

காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் உஷாரான தனிப்படை போலீசார், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ஒரு பப்பாளி தோட்டத்தில் வைத்து குற்றவாளி  ஒரு சிறுவனைச் சந்திக்க வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கணினி மற்றும் கைப்பேசியை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இதில் இன்னும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனித்து அவர்களுடன் எப்போதும் அன்பாகப் பேசி விழிப்புடன் இருக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி சனப் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.