தெலுங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவரது மனைவி கல்பனா, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமாகக் தீர்த்துக்கட்டக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம் தற்போது காவல்துறையினரிடம் அம்பலமாகியுள்ளது.
எடுலபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் ராஜேஸ்வர ராவ், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 27ஆம் தேதி மதிய உணவுக்காக திடீரென வீடு திரும்பியபோது, தனது மனைவி கல்பனா, கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் சைதுலு என்பவருடன் உல்லாசமாக இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைக்க முடிவு செய்து தனது அண்ணனை அழைக்கச் சென்ற ராஜேஸ்வர ராவ், தன்னை ஒரு நபர் பின்தொடர்வதைக்கவனித்து அவரைப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடினார். அதன் பிறகு சந்தேகத்தின் பேரில் வீட்டிற்கு வந்து மனைவியின் செல்போனை எடுத்து ஆய்வு செய்த ராஜேஸ்வர ராவ் உறைந்துபோனார்.
அதில், கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவரை வீட்டிற்குள் கொல்ல வேண்டாம், வெளியில் செல்லும் போது யாரையாவது வைத்து காரை ஏற்றித் தீர்த்துக்கட்டுங்கள், இல்லையென்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கல்பனா தனது காதலன் சைதுலுவுக்கு அனுப்பிய அதிர்ச்சியூட்டும் குறுஞ்செய்திகள் பதிவாகியிருந்தன.
கணவனைக் கொல்ல முயன்ற மனைவியின் சதியைத் துப்பு துலக்கிய ராஜேஸ்வர ராவ், அந்தச் செல்போனுடன் நேராக காவல் நிலையத்திற்குச் சென்று தன் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீதான புகாரைக் கண்ணீருடன் தெரிவித்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்கைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றி, கல்பனா மற்றும் சைதுலு ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்காகக் கணவனைக் காரை ஏற்றித் கொலை செய்ய முயன்ற மனைவியின் இந்தத் திடுக்கிடும் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
