மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சக பெண் தொழிலாளியின் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்மணி, காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் துரிதமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு கட்டுமானத் தளத்தில் கூலி வேலை செய்து வந்த இரண்டு பெண்கள் நட்பாகப் பழகியுள்ளனர்.

இதில் ஒரு பெண், தன் தோழியின் நம்பிக்கையைப் பயன்படுத்தி திடீரென அவருடைய பச்சிளம் குழந்தையுடன் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

குழந்தை மாயமானது குறித்து அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான பெண் தனது முகத்தை மூடிக்கொண்டு குழந்தையுடன் தப்பியோடுவதைக் கண்டறிந்தனர். மேலும், அந்தப் பெண் குழந்தையைக் கடத்திக் கொண்டு ரயிலில் தனது சொந்த ஊரான மண்டலாவிற்குத் தப்பியோட திட்டமிட்டுள்ள ரகசியத் தகவலும் போலீசாருக்குக் கிடைத்தது.

 

இதனைத் தொடர்ந்து உஷாரான ஜபல்பூர் காவல் துறையினர், ஜபல்பூர் ரயில் நிலையத்திற்கு உடனடியாக விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ரயில் ஏறும் முன்பாகப் பெண்மணியை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவரிடமிருந்த குழந்தையை எந்தவித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்டனர்.

துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறை அதிகாரிகளின் செயலுக்கு அப்பகுதி மக்களும் உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.