சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டைச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பொன்முடி அவர்கள் பொதுவெளியில் பேசும்போது சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி அவரது தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
பொன்முடியின் மனுவை பரிசீலித்து ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
