நூறு ஆண்டுகாலப் பழமையும், மூன்று தலைமுறைகளின் இனிமையான நினைவுகளையும் சுமந்து நின்ற ஒரு பாரம்பரிய வீடு, ஒரே ஒரு நொடியில் இடிந்து விழுந்து தரைமட்டமான சோகச் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

பல தலைமுறைகளாகச் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக வாழ்ந்து வந்த அந்த வீட்டின் சுவர்கள், ஒரே அடியில் இடிபாடுகளாக மாறி, அங்கிருந்த மனிதர்களின் உயிரைக் குடித்துள்ளது அப்பகுதி மக்களைப் பேராதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவு நேரம், அக்குடும்பத்தினர் அனைவரும் வேலைகளை முடித்துவிட்டு வழக்கம் போல் ஆழ்ந்த உறக்கத்தில் (சர்க்கரைத் தூக்கத்தில்) மூழ்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, பழமை வாய்ந்த அந்த வீட்டின் கூரையும் சுவர்களும் திடீரெனக் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தன.

தூக்கத்தில் இருந்த குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து தப்பித்து ஓடுவதற்குக்கூடக் கால அவகாசம் கிடைக்கவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறியும் படுகாயமடைந்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நள்ளிரவில் கேட்ட பெரிய இடி ஓசை போன்ற சத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, அந்த நூறாண்டு பழமையான வீடு தரைமட்டமாகிக் கிடப்பதைக் கண்டு உறைந்துபோயினர். உடனடியாகக் காவல் துறைக்கும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஆனால், அதற்குள் ஆறு உயிர்களும் பிரிந்துவிட்டன.

பல தசாப்த கால நினைவுகளைத் தாங்கி நின்ற ஒரு வீடு, ஒரே இரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரின் கல்லறையாக மாறிய இந்தச் சம்பவம், அப்பகுதி மக்கள் மனதில் ஆறாத வடுக்களையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.