மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாகச் சிறுமிகளை ஏமாற்றி வரும் நயவஞ்சகர்களின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்புப் பயிலும் 16 வயது மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் தனக்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகத் தன் வீட்டை விட்டுச் சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்துக் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்தனர்.

விசாரணையில், தானே பகுதியைச் சேர்ந்த பிபிஏ மாணவரான நிர்பய் மாதவ் பாக்ரே என்பவர், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ஆன்லைன் கேம் மூலம் அப்பெண்ணுடன் பழகி அவரது அந்தரங்கப் புகைப்படங்களைத் திருடி மிரட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது. திலோரி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அந்தச் சிறுமியைச் சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாகப் பூட்டி வைத்து அவர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து வந்துள்ளார். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தபோது சிறுமியின் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் பரிதாபமாகத் தவிப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர்.

அங்கு சிறுமிக்கு அருகில் கையில் பெல்ட்டுடனும், படுக்கைக்கு அருகில் கத்தியுடனும் நின்றிருந்த கொடூரக் குற்றவாளியைக் காவல்துறையினர் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். உடனடியாகப் பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், போக்ஸோ மற்றும் பிஎன்எஸ் (BNS) சட்டங்களின் கீழ் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.