தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாகப் பொய்த்தாக்கியுள்ளதாக திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
சென்னையில்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, தவெக அரசின் இந்த முதல் நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. குறிப்பாக, மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அது குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறவே இல்லை.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு இன்று புதிய முலாம் பூசப்பட்டு, வேறு பெயர்களில் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, அதற்கான உரிய நிதி ஒதுக்கீடும் பெருமளவில் செய்யப்படவில்லை. மாநிலத்தின் கசிவுகளை அடைத்துச் சொந்த வருவாயைப் பெருக்குவோம் எனக் கூறியவர்கள், பட்ஜெட்டில் அதற்கான எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. திமுக ஆட்சியை விட இந்த ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை வெகுவாக அதிகரித்துள்ளதையே பட்ஜெட் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வெள்ளை அறிக்கை வெளியீட்டின் போது, திமுக அரசு மூலதனச் செலவுகளையே செய்யாதது போலவும், மாநிலத்தின் கடன் சுமைக்கு திமுகதான் காரணம் என்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை அமைச்சர் ஏற்படுத்தியிருந்தார். ஆனால், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டை விட தற்போதைய பட்ஜெட்டில் மூலதனச் செலவு சுமார் ரூ.3,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடன் சுமை குறையாது என்பதை நிதித்துறைச் செயலாளரே இன்று பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் ரூ.1.22 லட்சம் கோடி நிகரக் கடனாகப் பெறப்பட உள்ளது. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் ரூ.22,000 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால், 5 ஆண்டுகள் முடியும் போது ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.

கொள்ளிடத்தில் பெரிய தடுப்பணைகளை உருவாக்கப்போவதாகக் கூறியவர்கள், அதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய மட்டுமே மிகச்சொற்பத் தொகையை ஒதுக்கியுள்ளனர். திமுக அரசு மீது அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விட, தற்போதைய அரசு நிதி நிர்வாகத்தில் மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருகிறது,” என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.