பீகார் மாநிலம் சப்பரா ரயில் நிலையத்தில், பயணிகள் நடமாட வேண்டிய நடைமேடையில் எருமைகளும், ரயிலின் பொதுப் பெட்டி இருக்கையில் ஆடுகளும் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.
பொதுவாக ரயில் நிலையம் என்றாலே பயணிகளின் கூட்டம், தேநீர் கடைகளின் சத்தம், சாமான்களுடன் ஓடும் மக்கள் மற்றும் ரயிலுக்காகக் காத்திருக்கும் பயணிகளின் பிஸியான தோற்றம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறான ஒரு வேடிக்கையான காட்சியை இந்த வைரல் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த வைரல் வீடியோவின் ஆரம்பத்தில் ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடை காட்டப்படுகிறது. அங்கே வழக்கமான பயணிகளின் கூட்டத்திற்குப் பதிலாக, பல எருமைகள் எந்தவித பயமுமின்றி ஹாயாக உலாவிக்கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும்போதே அவை ஏதோ ஒரு கிராமத்து மேய்ச்சல் நிலத்தில் சுற்றுவது போன்ற தோற்றத்தைத் தருகிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பயணிகள் சிலர் தங்களது மொபைல் போன்களில் இந்த விசித்திரக் காட்சியைப் பதிவு செய்துள்ளனர்.
View this post on Instagram
ஆனால், இதனுடன் முடிவடையவில்லை. வீடியோவின் அடுத்த கட்டம் இன்னும் தமாசாக உள்ளது. ரயிலின் பொதுப் பெட்டிக்குள்ளும் கேமரா செல்கிறது. வழக்கமாக இந்த பெட்டிகளில் பயணிகள் நிற்பதற்குகூட இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், இங்கே இரண்டு ஆடுகள் ஜாலியாக ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு பயணம் செய்கின்றன. சுற்றியுள்ள பயணிகள் யாரும் அவற்றை விரட்டாமல், புன்னகையுடன் இதைக் கண்டு ரசிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கிராமத்து எளிய மக்களின் சூழலையும், கிராமத்துச் சூழலையும் நினைவுபடுத்துவதாக சிலர் கூறினாலும், பெரும்பாலானோர் ரயில்வே நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் அலட்சியத்தை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர். அதே நேரத்தில், நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். “கண்டிப்பா இந்த ஆட்டுக்கு கன்ஃபார்ம் ஆன டிக்கெட் இருந்திருக்கும், அதனால்தான் சீட் கிடைச்சிருக்கு போல!” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
