கர்நாடகாவில் காவலர் பணிக்கான போட்டித் தேர்வு ஒன்றை எழுதுவதற்காக மையம் ஒன்றிற்குத் தாய் ஒருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் வருகை தந்துள்ளார். கைக்குழந்தையுடன் தேர்வு எழுதச் சென்ற அந்தத் தாய்க்குத் தன் குழந்தையை ய யாரிடம் விட்டுச் செல்வது என்று தெரியாமல் பெரும் குழப்பமும் மனக்கலக்கமும் ஏற்பட்டுள்ளது. தேர்வு நேர நெருக்கடியில் தவித்துக் கொண்டிருந்த அந்தத் தாயின் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அங்கிருந்த பெண் காவலர்கள் உடனடியாக உதவ முன்வந்துள்ளனர்.

தேர்வு எழுதும் நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்த பெண் காவலர்கள், உடனடியாகச் செயலில் இறங்கித் தாங்களே ஒரு தொட்டிலைக் கட்டிச் சீராக அமைத்துள்ளனர். தேர்வு எழுதும் தாய் திரும்ப வரும் வரை அந்தச் சிறிய குழந்தைக்கு எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படாதவாறு, மிகுந்த அன்போடும் அக்கறையோடும் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்துள்ளனர். தேர்வு எழுதும் அறைக்கு வெளியே நிகழ்ந்த இந்த எதிர்பாராத மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தேர்வு முடிந்து வெளியே வந்த தாய் தனது குழந்தையைப் பத்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பார்த்துக் கொண்ட பெண் காவலர்களைக் கண்டு கண் கலங்கி நின்றார். இது தொடர்பான புகைப்படங்களும் தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருவதுடன், பெண் காவலர்களின் இந்த உன்னதமான மனிதநேயச் செயலுக்கு இணையவாசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து பாராட்டு மழையும் குவிந்து வருகிறது.