கர்நாடக மாநிலத்தின் கேசகோடு கிராமத்தைச் சேர்ந்த ரகு (41), சொந்தமாக பேக்கரி நடத்தி வந்தார். அவருக்கு காகனா (38) என்ற மனைவியும், 12 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்களும் உள்ளனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், தொழில் காரணமாக ரகு சில காலமாக வேறு பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், மனைவியின் நடத்தையில் ரகுவுக்கு கடந்த சில நாட்களாக சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நாளில் இருவரும் காரில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு வெடித்ததாகவும், ஆத்திரமடைந்த ரகு காரிலேயே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பிறகு, நடந்த சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்த ரகு, வீட்டுக்குச் சென்றதும் வீடியோ கால் மூலம் மாமனார் மற்றும் மாமியாரை தொடர்புகொண்டு, “உங்கள் மகளை கொலை செய்து விட்டேன்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கொலை செய்யப்பட்ட காட்சியையும் அவர்களுக்கு அனுப்பிவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கூறி அழைப்பை துண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கிராமத்தில் உள்ள மரம் ஒன்றில் ரகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர். அதே நேரத்தில், காகனாவின் உடலை அருகிலுள்ள கால்வாயில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரட்டை சோக சம்பவம் கேசகோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
