மத்தியப் பிரதேச மாநிலம் பேல்கி கிராமத்தில், பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 30-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் மர்ம மரணமாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், தற்போது குழந்தையின் தாயையே போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. குழந்தையின் மரணம் தண்ணீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே காரணம் என பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குழந்தையின் 21 வயதான தாய் சோனு பட்டேலிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பிரசவத்திற்குப் பிறகு மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், குழந்தையை வளர்ப்பது தொடர்பான கவலையால் அந்த முடிவை எடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். வீட்டின் குளியல் பகுதியில் இருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்மில் குழந்தையை மூழ்கடித்து கொன்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தையின் தாயை கைது செய்த போலீசார், ஜூலை 31-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
