சென்னை அண்ணா நகர் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துத் தகராறு காரணமாக தாய் மற்றும் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 69 வயதான அஷ்ரப் நிஷா என்பவருக்கு, அப்ரார் அஹமது (50), அஷ்ரார் அஹமது (49) மற்றும் பல் மருத்துவரான அஷ்ரப் அஹமது (42) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த சொத்துச் சண்டை தற்போது ஒரு கோர முடிவை எட்டியுள்ளது.

நேற்று அதிகாலையில் அஷ்ரப் நிஷாவும் அவரது இளைய மகனும் வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முற்பட்டனர். அப்போது உடல்களைப் பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தாயின் முகம் மற்றும் உடலிலும், டாக்டர் அஷ்ரப் அஹமதின் இடுப்பு, கைகள் மற்றும் கால்களிலும் கடுமையான காயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துக் காவலர்களிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இறப்பில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை உடனடியாகத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்பச் சொத்தை விற்பனை செய்து அதில் பங்கீடு செய்வது தொடர்பாக குடும்பத்தில் தொடர்ச்சியாக மோதல்கள் ஏற்பட்டுவந்தது அம்பலமானது. இந்தச் சொத்துப் பங்கீட்டுத் தகராறே இந்த இரட்டைக் கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உயிரிழந்த மூதாட்டியின் மூத்த மகன்களான அப்ரார் அஹமது மற்றும் அஷ்ரார் அஹமது ஆகிய இருவரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின் தொடக்கத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த இருவரும், பின்னர் தாங்களே திட்டமிட்டுத் தாயையும் தம்பியையும் அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் தொடர்ந்து இருவரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்களின் குடும்பத்தினரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.