உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியில் நிகழ்ந்த கோரச் சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், தனது வீட்டின் ஒரு பகுதியை குடும்பத்தினருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த தம்பதியினரின் 10 வயது மகளை, வீட்டின் உரிமையாளரே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி, இந்த கொடூரச் செயலை அவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டலும் விடுத்து வந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு வந்த சிறுமி, கடந்த புதன்கிழமை அன்று நடந்த கொடூரங்களை தனது தாயிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். தனது மகளின் நிலைகண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த தாயார், உடனடியாக இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாயின் புகாரின் தீவிரத்தைகைக் கருத்திற்கொண்ட காவல் துறையினர், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக முயன்ற வீட்டின் உரிமையாளரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் செயலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா அல்லது வேறு யாருக்காவது இந்த வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று வாடகைக்குக் குடியிருந்த குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.