லாரி டிரைவர் ஒருவர் தனது உதவியாளரிடம் செல்போனைக் கொடுத்த விபரீதம், அவரது வங்கி கணக்கில் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் காலி செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடும் மோகம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தன் உழைப்பில் சேர்த்த பணத்தை ஒரே நொடியில் இழந்த அந்த டிரைவரின் சோகம் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, லாரி டிரைவர் தன் செல்போனை உதவியாளரிடம் கொடுத்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளைய உதவியாளர், டிரைவரின் அனுமதியின்றி பிரபலமான ‘ஃப்ரீ ஃபயர்’  ஆன்லைன் வீடியோ கேமிற்காக இன்-கேம் டாப்-அப்களைச்  செய்துள்ளார். இதன் மூலம் படிப்படியாக அவரது கணக்கிலிருந்து மொத்தம் 45,600 ரூபாய் பணம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

பணம் பறிபோனதை அறிந்து அதிர்ந்துபோன டிரைவர் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய, அந்தத் தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது. இந்தச் சம்பவம் இன்னும் முழுமையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியமானது என்ற விவாதத்தை இது தீவிரமாக எழுப்பியுள்ளது. குழந்தைகளுக்கு அல்லது மற்றவர்களிடம் செல்போனைத் தரும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது பாடம் புகட்டியுள்ளது.

இது போன்ற ஆன்லைன் திருட்டுகள் மற்றும் கேமிங் செலவுகளைத் தவிர்க்க, பயனர்கள் செல்போன்களுக்கு வலுவான ஸ்கிரீன் லாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், கூகுள் பே அல்லது பேடிஎம் போன்ற செயலிகளில் பணம் செலுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது கைரேகை கட்டாயம் கேட்கும் ஆப்ஷனை  இயக்க வேண்டும் என்றும் சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வங்கிப் பரிவர்தனைக்கான உடனடி குறுஞ்செய்தி  எச்சரிக்கைகளை எப்போதும் ஆன் செய்து வைத்திருப்பது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகின்றனர்.