வாழ்க்கையின் சூழல் மனிதனை எந்த எல்லைக்கும் தள்ளிவிடும் என்பதற்கு மலேசியாவில் நடக்கும் ஒரு சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்தச் செய்தி, உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு ஏழைத் தந்தையின் வலியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பசியோடு இருந்த வாடிக்கையாளருக்கு உணவை வழங்க வந்த அந்த நபர், தன் உடல் வலியைப் பொருட்படுத்தாமல் உழைத்த விதம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த ‘ஹாவோயி இயோ’  என்ற பெண்மணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் ஆன்லைன் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் உணவு வந்துசேர்ந்தது. உணவைப் பெற்றுக்கொள்ள வெளியே சென்ற ஹாவோயி, டெலிவரி செய்ய வந்த நபர் கடுமையான வலியுடன் நொண்டி நொண்டி நடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அவரது கால் உடைந்துவிட்டதோ என்று அஞ்சிய அவர், உடனடியாக அந்த ஊழியரிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார்.

அப்போது அந்த நபர், அன்று மதியம் மழை பெய்துகொண்டிருந்தபோது ஒரு வளைவில் கார் ஒன்று தனது மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகவும், அதில் தனது காலில் பலத்த அடிபட்டுள்ளதாகவும் மிகவும் அமைதியாகக் கூறியுள்ளார். “இந்தக் காலுடன் நீங்கள் உடனே மருத்துவமனைக்குத்தானே சென்றிருக்க வேண்டும்? எப்படி உங்களால் வாகனம் ஓட்ட முடிகிறது? உங்கள் நிலைமையை உங்கள் மனைவி பார்த்தால் எவ்வளவு கவலைப்படுவார்?” என்று அந்தப் பெண் அக்கறையுடன் கேட்டுள்ளார்.

இதற்கு அந்த டெலிவரி ஊழியர் சொன்ன பதிலைக்கேட்டு அந்தப் பெண்ணின் இதயம் நொறுங்கிவிட்டது. “என் மனைவியுடன் விவாகரத்து ஆகிவிட்டது, அவள் குழந்தைகளை என்னிடமே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். நான் இந்த நேரத்தில் ஓய்வெடுக்கச் சென்றால், என் பச்சிளம் குழந்தைகள் பசியால் செத்துப்போவார்கள். அதனால் எனக்கு எவ்வளவு வலித்தாலும் பரவாயில்லை, நான் வேலை செய்தே ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்தச் பதையைக் கேட்டதும் கண் கலங்கிய அந்தப் பெண், அவருக்கு உடனடியாகத் தேவையான பணத்தை உதவியாக வழங்கி, அந்தத் தந்தையின் உழைப்புக்குத் தலைவணங்கினார்.