தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தவெக ஆட்சியின் செயல்பாடுகளையும், விஜய்யின் பேச்சையும் கடுமையாகச் சாடி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசமாகப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.பி. உதயகுமார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் குறித்து விஜய் தெரிவித்த கருத்துகளுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். அதிமுகவைச் சார்ந்தவர்களை ‘தீய சக்தி’ என்று விமர்சிப்பதற்கு விஜய்க்கு எந்தவிதமான தகுதியும் உரிமையும் இல்லை என்று அவர் காரசாரமாகச் சாடினார்.

​தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக எம்.எல்.ஏ-க்களை தீய சக்தி என்று சொல்லும் விஜய், அவர்களிடம் நடவடிக்கை எடுக்க என்ன வாஷிங் மெஷினா வைத்திருக்கிறார்? இது ஒரு கேடுகெட்ட ஆட்சி, மானங்கெட்ட ஆட்சி! இதைப் பற்றிப் பேசுவதற்கே ஒன்றுமில்லை” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் தவெக அரசை விமர்சித்தார்.

​மேலும், தற்போதைய ஆட்சியின் அவலங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், வரும் தேர்தலில் இந்த ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாகச் சரியான சம்மட்டி அடியை தீர்ப்பாக வழங்குவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். ஆர்.பி. உதயகுமாரின் இந்த ஆவேசப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், தவெக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.