உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் வளாகத்திற்குச் சுற்றுலா வந்த தென் கொரியப் பெண் பயணியை வெறிபிடித்த குரங்கு ஒன்று திடீரெனத் தாக்கிக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த அந்த வெளிநாட்டுப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால், அங்கிருந்த பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தவித்துப் போன அவலம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத் தலமான இங்கு பாதுகாப்பு மற்றும் அவசரக்கால மருத்துவ சேவைகள் கேள்விக்குறியாகியுள்ளதை இச்சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த கிம் மெஹ் என்பவர் தனது நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் தாஜ்மஹாலுக்கு வருகை தந்துள்ளார். நுழைவு வாயில் அருகில் அவரது நண்பர் தண்ணீர் பாட்டில் மற்றும் காலணி வாங்கச் சென்றபோது, தனியாக நின்றுகொண்டிருந்த கிம் மெஹ் மீது எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த குரங்கு அவரது வலது கையில் பலமாகக் கடித்துக் குதறியது. இதனால் வலியால் அலறியடித்த அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியதைப் பார்த்த அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், உடனே குரங்கைத் துரத்திப் பிடித்தனர்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு ASI மற்றும் CISF வீரர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒவ்வொரு முறையும் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவதாகக் கூறி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏமாற்றியதால், அந்தப் பெண் கடுமையான வலியால் துடித்துப் போனார். வேறு வழியின்றி பொதுமக்களே தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தென் கொரியப் சுற்றுலாப் பயணிகள் நேரடியாகத் தங்கள் விடுதிக்குத் திரும்பினர். இதற்கிடையில், ஆம்புலன்ஸ் சேவை வழங்கத் தவறியமைக்காக மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா தனதுதவறை ஒப்புக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் ஊதியத்தை நிறுத்தி வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தாஜ்மஹால் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லைக்கு உரிய நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
