தமிழக அரசியலில் களமிறங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், அண்மையில் சென்னையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியிலும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் இந்தத் திடீர் கள ஆய்வுகள் ஒருபுறம் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகியிருக்க, மற்றொருபுறம் அன்றைய தினம் அவர் அணிந்து வந்த கம்பீரமான ஆடை, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை பலமாக ஈர்த்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வரை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தூய வெள்ளை நிற வேட்டி-சட்டையையே தங்களின் முதன்மை அடையாளமாக அணிந்து வந்துள்ளனர். ஆனால், திரைத்துறையிலிருந்து அரசியல் களம் கண்டுள்ள தமிழகத்தின் 12-வது முதலமைச்சரான விஜய், இந்த வழக்கமான பாணியிலிருந்து சற்று மாறுபட்டு புதுமையான ஆடை கலாசாரத்தைப் பின்பற்றி வருகிறார்.
வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி-சட்டை அணிவதோடு, மற்ற நாட்களில் நவீன ‘கோட்-சூட்’ மற்றும் ஃபார்மல் ஆடைகளில் வலம்வருவது அவரது தனித்துவமான அடையாளமாக மாறியுள்ளது. இந்நிலையில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது, நீல நிற சட்டையை நேர்த்தியாக ‘டக்கிங்’ செய்து விஜய் வந்திருந்தார். அப்போது அவர் இடுப்பில் அணிந்திருந்த வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்ட பெல்ட் அனைவரின் பார்வையையும் சட்டென ஈர்த்தது.
திரை நட்சத்திரமாக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், அவர் அணியும் ஆடைகள் குறித்து எப்போதுமே ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில், அவர் அணிந்திருந்த பெல்ட் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘லூயிஸ் விட்டான்’ என்ற பிராண்டின் தயாரிப்பு என்பதை ஆர்வலர்கள் உடனே கண்டுபிடித்தனர். இந்த சிறப்புமிக்க பெல்ட்டின் சந்தை விலை குறித்து விபரம் அறிய விரும்பிய ரசிகர் ஒருவர், ‘க்ரோக்’ ஏஐ செயலியிடம் வினவியுள்ளார்.
அதற்கு கிடைத்த தகவலின்படி, முதலமைச்சர் விஜய் அணிந்திருந்த அந்த லூயிஸ் விட்டான் பெல்ட்டின் இந்திய மதிப்பு சுமார் ரூ.66 ஆயிரம் இருக்கும் எனக் தெரியவந்துள்ளது. வழக்கமாக இந்த சர்வதேச ஆடம்பர பிராண்டின் பெல்ட்டுகள் சந்தையில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் இந்த நவீன ஆடைத் தேர்வும், சொகுசு பெல்ட்டின் விலையும் தற்போது இணையத்தில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
