ஜப்பான் நாட்டில் உள்ள யவாட்டா நகரின் இளம் மேயரான ஷோகோ கவாட்டா, தனது பதவிக்காலத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சுமார் 69,000 மக்கள் வசிக்கும் அந்த நகரத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் இவர், கடந்த 2023ஆம் ஆண்டில் தனது 33வது வயதில் மிக இளம் வயது மேயராகப் பதவியேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர்.
அங்குள்ள சாதாரண ஊழியர்களுக்கு 16 வார கால மகப்பேறு விடுப்பு முறை நடைமுறையில் இருந்தாலும், மேயர் பதவிக்கு இதுவரை அப்படிப்பட்ட எந்தவொரு விதியும் இருந்ததில்லை. இந்தத் தடையை உடைத்துவிட்டு நாட்டின் முதல் மேயராக அவர் விடுப்பில் சென்றிருப்பது உலகளாவிய அளவில் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்துப் பேசிய மேயர் ஷோகோ கவாட்டா, மேயர் பதவியில் இருந்து கொண்டு மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் பெண் நான்தான் என்பதைத் அறிந்தபோது தாமே வியந்துபோனதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் களம் ஆண்களின் ஆதிக்கத்திலேயே நீண்டகாலமாக நீடித்து வருவதால் தான் இதுபோன்ற பொறுப்புகளில் பெண்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் கர்ப்பமாக இருந்தபோதுகூட பாரம்பரிய வழக்கமான ‘மிகோஷி’ எனப்படும் வழிபாட்டுத் தேரின் மீது அமர்வதைத் தவிர்த்துவிட்டு, நிறைமாதக் கர்ப்பிணியாக அதன் பின்னால் நடந்து சென்று தனது சமூகக் கடமையை ஆற்றியது பலரையும் நெகிழச் செய்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில் ஜப்பான் பின்தங்கியுள்ள நிலையில், தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்காத ஒரு சுதந்திரமான பணிச்சூழலைச் சமூகம் உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் தலைமைப் பதவிகளில் அமர்வதையும் மகப்பேறு விடுப்பு எடுப்பதையும் சிலர் இணைய வழியில் குறைகூறி விமர்சித்த போதிலும், மக்கள் தொகை சரிவு மற்றும் பொருளாதாரச் சீரழிவைத் தவிர்க்க இத்தகைய சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் தன்னை அறியாதவர்கள் கூட இந்த மகப்பேறு விடுப்பு விவகாரத்தின் மூலமாகவே தன்னைத் தேடித் தெரிந்துகொண்டதாக அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டியுள்ளார். பாலின சமத்துவம் குறித்தும் பணியிடச் சீர்திருத்தங்கள் குறித்தும் உலக அரங்கில் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ள ஜப்பான் பெண் மேயரின் இந்த அதிரடி முடிவு, தற்பொழுது இன்டர்நெட்டில் தீயாய் பரவி பெரும் டிரெண்டாகி வருகிறது.
