பாகிஸ்தானின் கராச்சி மாநகராட்சி மேயர் முர்தாசா வஹாப், நகரின் குறுகிய தெருக்களில் அவசர மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் “புரட்சிகர சைக்கிள் ஆம்புலன்ஸ்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

குறுகிய சந்துகளில் பெரிய ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத சூழலில், இந்த சைக்கிள்கள் உடனடியாகச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கும் என்று மேயர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சில சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் முதலுதவி பெட்டி மற்றும் அவசிய மருத்துவப் பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

“>

இருப்பினும், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட உடனே சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கடுமையான கேலிக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் பொருளாதாரத்தில் முதன்மையான நகரமான கராச்சியில், நவீன மருத்துவ வசதிகளையும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, “சைக்கிள் ஆம்புலன்ஸ்” திட்டத்தை ஒரு பெரிய சாதனையாகக் காட்டி மேயர் விளம்பரம் செய்வதாகப் பொதுமக்கள் சாடியுள்ளனர்.

நெட்டிசன்கள் சிலர், “எதிர்காலத்திற்கு நல்வரவு”என்று கிண்டலாகக் குறிப்பிட்டு, நவீன தொழில்நுட்ப உலகில் பாகிஸ்தான் பின்னோக்கிச் செல்வதாக விமர்சித்துள்ளனர். தீவிரமான அவசர காலங்களில் சைக்கிள் மூலம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாது என்றும், இது வெறும் விளம்பர அரசியல் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேயர் முர்தாசா வஹாப் பெருமையுடன் தொடங்கி வைத்த இந்த திட்டம், தற்போது சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் விமர்சனங்களாகவும் வைரலாகி வருகிறது.