மாலை நேரத்து அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது நாம் பல பயணங்களைச் சந்திக்கிறோம். ஆனால், ஒரு சாதாரண ஆட்டோ பயணம், ஒருவரது வாழ்க்கைப் பார்வையையே மாற்றும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் ஆகாஷ் குப்தா என்ற பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு குறித்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது.
அந்த ஆட்டோ ஓட்டுநர் முன்னதாக குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தவர். அங்கு அவருக்கு மாதம் 25,000 ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. ஆனால், அதிக வேலை நேரம் மற்றும் குறைந்த வருமானம் காரணமாக, அவர் தனது வேலையை விடுத்து ஆட்டோ ஓட்டத் தீர்மானித்தார். ஆரம்பத்தில் இந்த முடிவு சவாலாக இருந்தாலும், உழைப்பையும் நேரத்தையும் சரியாகத் திட்டமிட்டதன் மூலம், இன்று அவர் ஒரு ‘கிக் என்டர்பிரினியர்’ ஆக மாறி, தினசரி 8 முதல் 9 மணி நேரம் மட்டுமே உழைத்து, அனைத்துச் செலவுகளும் போக மாதம் சுமார் 45,000 ரூபாய் வரை சேமித்து அசத்தி வருகிறார்.
View this post on Instagram
அவரது தினசரி உழைப்பு முறை மிகவும் திட்டமிடப்பட்டது. காலையில் ஆட்டோவுடன் கிளம்பும் அவர், மதியம் வரை சவாரி பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு அருந்தி, ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு இரவு 9 மணி வரை உழைக்கிறார். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பது மட்டுமின்றி, தனது குடும்பத்தினருடன் செலவிடுவதற்கும் அவருக்குப் போதிய நேரம் கிடைக்கிறது. முறையான திட்டமிடல் இருந்தால் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற முடியும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.
இந்தக் கதையின் நெகிழ்ச்சியான பகுதி, அவரது பிள்ளைகள் மீதான பாசம் தான். தனக்குச் சரியான கல்வி கிடைக்காததால் பட்ட கஷ்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தன் மூன்று பிள்ளைகளுக்கும் அந்த நிலை வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காகவே தனது உழைப்பின் பெரும் பகுதியை கிராமத்தில் படித்து வரும் தனது பிள்ளைகளின் கல்விச் செலவிற்காகவே ஒதுக்குகிறார். “உண்மையான வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல, அதைச் சரியான முறையில் பயன்படுத்துவதில்தான் உள்ளது” என்பதை நிரூபித்துள்ள இந்தத் தந்தையின் உழைப்பிற்கு இணையவாசிகள் தங்கள் பாராட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.
