சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஒரு  பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களது வீட்டிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த உடனே,  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களது விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் இது கூட்டுக் தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, அங்குள்ள படுக்கையறையில் நான்கு பேர்  வாயில் நுரை தள்ளியவாறு கிடந்துள்ளனர். அதே நேரத்தில் அந்த குடும்பத்தின் தலைவரான சாஜித் என்பவர் உயிருக்குப் போராடியபடி படுக்கையில் தவித்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து அனைவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தைக் காவல்துறையினர் சோதித்த போது, அங்கிருந்து சில கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த கடிதங்களில், குறிப்பிட்ட ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைப்பது குறித்தும், தங்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் மொபைல் போன் எண்களைப் பயன்படுத்துவது குறித்தும் எழுதப்பட்டிருந்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்கொலைக்குக் குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

மறுபுறம், அப்பகுதி மக்கள் கூறும்போது, உயிரிழந்த சாஜித்தின் குடும்பம் கடந்த சில காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர். கடனைத் திரும்பக் கேட்டுப் பலரும் அடிக்கடி அவர்களது வீட்டிற்கு வந்து சாஜித்தை நெருக்கடிக்குள்ளாக்கி வந்துள்ளனர் என்றும், இந்த மன உளைச்சல் காரணமாகவே அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர். எனினும், இவர்களது மரணத்திற்கான உண்மையான காரணம் உடற்கூறாய்வு  மற்றும் தடயவியல் பரிசோதனை அறிக்கைகள் வெளியான பிறகே முழுமையாகத் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.