உழைப்பின் களைப்பைப் போக்க நீர்நிலையை நாடிய 12 வயது சிறுவன் ஒருவன், முதலையின் வாய்க்குள் இரையான நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வயலில் நெல் நடும் பணிகளை முடித்துவிட்டு, கைகால்களைக் கழுவுவதற்காக அருகில் இருந்த காக்ரா ஆற்றங்கரைக்கு அந்தச் சிறுவன் சென்றுள்ளான்.
அவன் தண்ணீரைத் தொட்ட அந்த ஒரு நொடிக் குள், ஆற்றுக்குள் மறைந்திருந்த ராட்சத முதலை ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து சிறுவனைக் கவ்விப் பிடித்தது. முதலையின் இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அலறியபடி தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், கையில் கிடைத்த செங்கற்கள் மற்றும் குச்சிகளை வீசி முதலையிடமிருந்து அவனை மீட்க கடுமையாகப் போராடினர்.
எனினும், அந்த கொடிய விலங்கு சிறுவனைத் தனது வலுவான பிடிக்குள் வைத்திருந்தவாறு, ஆழமான தண்ணீருக்குள் மூழ்கி கண் இமைக்கும் நேரத்தில் மறைந்தது.
இந்த கோர விபத்து குறித்து உடனடியாக வனத்துறை மற்றும் மீட்புக்குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அந்த ஆற்றுப் பகுதியிலிருந்து சிறுவனின் உடல் பாதியளவு சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. கண் முன்னே துடிதுடிக்க ஒரு இளம் உயிர் முதலையின் பிடிக்குள் சிக்கி பலியான இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மீளாத் துயரத்தையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
