கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் இருந்து  பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அந்தப் பேருந்தில் வழக்கத்தை விடப் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது. அந்தச் சமயத்தில் பேருந்தின் நடத்துனர் தான் அதுவரை டிக்கெட் விற்றுக் கலெக்ஷன் செய்த பணத்தை ஒரு பையில் போட்டு, அதனை ஓட்டுநர் இருக்கைக்கு அருகே இருந்த என்ஜின் மீது பத்திரமாக வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பேருந்தின் மற்றப் பகுதிகளுக்குச் சென்ற கண்டக்டர், டிஜிட்டல் முறையில் கியூ.ஆர். கோடு கருவி மூலம் பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். கண்டக்டர் டிக்கெட் கொடுப்பதில் மும்முரமாக இருந்த அந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு பெண் பயணி, என்ஜின் மீது வைக்கப்பட்டிருந்த கண்டக்டரின் பணப்பையை லாவகமாகத் திருடித் தனது பைக்குள் மறைத்துக்கொண்டார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு முன் பகுதிக்குத் திரும்பிய கண்டக்டர், என்ஜின் மீது இருந்த பணப்பை மாயமாகி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Hook NewsFeed (@hooknewsfeed)

இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கண்டக்டர் விசாரித்தபோது, சந்தேகத்திற்கிடமான ஒரு பெண் பயணி என்ஜின் அருகே வந்து சென்றதாகத் தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்தப் பெண்ணிடம் கண்டக்டர் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணோ தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலக் கூறி நாடகமாடியுள்ளார். ஓடும் பேருந்திலேயே இந்த விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில், அந்தப் பகுதியில் பணியில் இருந்த ஒரு பெண் போக்குவரத்து போலீசாரிடம் பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக விஷயத்தைக் கூறி பேருந்தை நிறுத்தினார்.

இதையடுத்து, அந்தப் பேருந்திற்குள் வந்த பெண் போலீஸ், சந்தேகத்திற்குரிய அந்தப் பெண் வைத்திருந்த பையை அதிரடியாகச் சோதனையிட்டார். அதில் கண்டக்டரின் திருடுபோன பணப்பை இருந்தது கையும் களவுமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும் அந்தப் பெண் அசராமல், யாரோ மர்ம நபர் பையைத் திருடித் தனது பைக்குள் போட்டுவிட்டதாகப் புதிய கதை கட்டினார். அது தானியங்கி கதவு கொண்ட பேருந்து என்பதால், கதவைத் திறக்குமாறு ஓட்டுநரிடம் கெஞ்சிய அந்தப் பெண், தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், குழந்தைகளைக் கவனிக்க வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் கண்ணீர் மல்கக் கூறினார். இருப்பினும், அவரது நாடகத்தை நம்பாத பெண் போலீஸ் மற்றும் பேருந்து ஊழியர்கள், அந்தப் பெண்ணைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்தப் பெண்ணைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.