பாலிவுட் மற்றும் சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மௌனி ராய், அண்மையில் பாப்பராசிகளிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்த மௌனி ராய், சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த மௌனி ராயை, புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பொறுமையிழந்த மௌனி ராய், “இனிமேல் என்னை எப்பொழுதுமே புகைப்படம் எடுக்காதீர்கள்” என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றார். நடிகையின் இந்த திடீர் கோபமும் ஆக்ரோஷமான வார்த்தைகளும் அங்கிருந்தவர்களையும், இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெறத் தொடங்கியதை அடுத்து, மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு விளக்கமளித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தான் ஏன் அந்தத் தருணத்தில் அப்படி நடந்துகொண்டேன் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார். தொடர் வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட இடைவெளி இல்லாத சூழல் காரணமாகவே அந்தத் தருணத்தில் உணர்ச்சிவசப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
