திருச்சியில் மதிய உணவு கொண்டு வராத ஒரே காரணத்திற்காக, மனைவியின் மண்டையை உடைத்த கணவன், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை வார்டுக்குள்ளேயே புகுந்து, “நீ இன்னும் சாகலையா?” எனக் கத்தியபடி கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற மூர்த்தி (40), அங்குள்ள ஒரு பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா (36) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கவிதா தினமும் மதிய உணவை சமைத்து, கணவனின் வேலைக்கே கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) ஏதோ ஒரு காரணத்தினால் கவிதாவால் சாப்பாடு கொண்டு செல்ல முடியவில்லை. இதனை அவர் கணவனுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார், மாலையில் வீட்டுக்கு வந்ததும் கவிதாவிடம் பயங்கரமாக சண்டை போட்டுள்ளார். கோபத்தின் உச்சிக்குச் சென்றவர், வீட்டில் இருந்த தேங்காய் துருவும் கட்டையை எடுத்து கவிதாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் கவிதா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்து தப்பிய சந்தோஷ் குமார், தனது மாமியாருக்கு போன் செய்து, “உன் மகளை அடித்துவிட்டேன்” என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த கவிதாவின் தாய், மகளை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்.

ஆனால், சந்தோஷ் குமாரின் வெறி அடங்கவில்லை. நள்ளிரவில் மனைவியைப் பார்ப்பது போல நைசாக அந்தத் தனியார் மருத்துவமனை வார்டுக்குள் நுழைந்துள்ளார். கணவன் தன்னை பார்க்கத்தான் வருகிறார் என கவிதா நினைத்த நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்த சந்தோஷ் குமார், “நீ இன்னும் உயிரோடுதான் இருக்கியா?” என்று கத்தியபடியே கவிதா மீது பாய்ந்தார். கவிதாவின் வயிற்றில் அடுத்தடுத்து கொடூரமாகக் குத்தினார். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கண்முன்னே நடந்த இந்த பயங்கர தாக்குதலில் கவிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், கொலையாளி சந்தோஷ் குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.